மக்கள் நலவாழ்வு கோரிக்கைகள் – 2019

மக்கள் நலவாழ்வு இயக்கத்தின் [Peoples Health Movement – India] தமிழ் மாநில அமைப்பின் சார்பாக தமிழ்நாடு நாடாளுமன்ற தேர்தல் 2019 மக்கள் நலவாழ்வு கோரிக்கைகள்

அனைத்து குடிமக்களுக்குமான அடிப்படை உரிமைகளில் ஒன்றான நலவாழ்வு உரிமைகளை குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் உறுதிப்படுத்துவது அரசின் கடமையாகும். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தின் நலவாழ்வு நிலை குறியீடுகள் முன்னேற்றம் அடைந்துள்ள போதிலும் பாலின, வர்க்க, சாதி ரீதியாக நிகழும் ஏற்றத்தாழ்வுகளை பல வருடங்களாக நம்மால் குறைக்க இயலவில்லை.

அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான நிதியும், மனிதவளமும் வழங்குவதற்கான அரசியல் உறுதியில்லாத நிலை ஒருபுறம், எந்தவித கட்டுப்பாடும் இன்றி இலாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு மக்களை சுரண்டிக் கொண்டிருக்கும் தனியார் மருத்துவமனைகளின் அசுர வளர்ச்சி மறுபுறம் என்பதே தமிழகத்தின் தற்போதைய நிலைமை. உணவு, குடிநீர், இருப்பிடம், வாழ்வாதார உரிமைகளோடு தரமான, முழுமையான, இலவச நலவாழ்வு சேவைகளை வழங்குவதன் மூலமாகவே நலமான தமிழகத்தை கட்ட இயலும். பல்வேறு தரப்பு மக்கள், வல்லுநர்கள், சமூக குழுக்கள் ஆகியோரின் கருத்தறிந்து கீழ்கண்ட கோரிக்கைகளை மக்கள் நலவாழ்வு இயக்கம் முன்வைக்கிறது.

கோரிக்கைகள்:

 1. தனியார் மருத்துவமனைகளை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் சுதந்திரமான, முழுமையான முறைபடுத்தும் அமைப்பை ஏற்படுத்த ஏற்றவாறு தமிழ்நாடு மருத்துவமனைகள் (திருத்த) முறைபடுத்துதல் சட்டம் 2018 ல் திருத்தம் மேற்கொண்டு உடனடியாக முழுமையாக அமுல்படுத்து.
 2. தமிழகம் முமுமைக்குமான ஒரே சேவை கட்டணத்தை நிர்ண்யம் செய்து அமல்படுத்து. மருத்துவ ஆய்வக சேவைகளுக்கான கட்டண கொள்கையை உருவாக்கி அமுல்படுத்த வேண்டும்
 3. தனியாருக்கு மக்கள் பணத்தை கொண்டு சேர்க்கும் காப்பீட்டு திட்டம் உட்பட அரசு துறையில் அனைத்து தனியார் மயமாக்கலையும் நிறுத்து.
 4. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நலவாழ்விற்கான நிதி ஒதுகீட்டை 5%மாக உயர்த்தவும், நலவாழ்வு உரிமைக்கான தேசிய சட்டத்தை நிறைவேற்றவும் மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும்.
 5. அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீரை உள்ளாட்சி அமைப்புகள் வழியாக வழங்கு.
 6. ஆரம்ப சுகாதார நிலையங்களில் (ஆசு. நிலையங்கள்) 24மணி நேரமும் மருத்துவரை பணியமர்த்து. ஆசு. நிலையங்கள் உள்பட தமிழகத்தின் அனைத்து மருத்துவமனைகளிலும் 4 மணி முதல் 8 மணி வரை இயங்கும் மாலை நேர புறநோயாளிகள் சிகிச்சையை உத்திரவாதப்படுத்து. மேலும் 24 மணி நேரமும் இயங்கும் அவசர சிகிச்சை பிரிவை உருவாக்கு.
 7. ஆசு. நிலையங்களில் பல்வேறு சிறப்பு பிரிவு மருத்துவ குழுவை பணி அமர்த்து.
 8. பொது சுகாதார துறையில் தாய்-சேய் நலசேவைகளை தாண்டி அனைத்து நோய்தடுப்பு மற்றும் நலமேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் செயல்பாடுகள் சீரமைக்கப்பட வேண்டும்.
 9. துணை சுகாதார நிலையங்களையும், சேவைகளையும் முழுவதுமாக செயல்படுத்து.
 10. மருத்துவ துறையில் உள்ள அனைத்து காலிபணியிடங்களையும் தாமதமின்றி வெளிப்படை தன்மையுடன் நிரப்பவேண்டும்.
 11. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்ட மருத்துவமனை கல்லூரிகளை தரம் உயர்த்தி அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரிகளை உருவாக்கவேண்டும்.
 12. தமிழகத்தில் மருத்துவ கல்வியின் தரம் சீரமைக்கப்படுவதற்காக கல்வியாளர்கள் கொண்ட குழுவை அமைத்து தரமான கல்வி அளிக்கவேண்டும்.
 13. பகுதி சார்ந்த, தொழில் சார்ந்த நோய்களுக்கான சிறப்பு சிகிச்சை மருத்துவமனைகளை அந்தந்த பகுதிகளில் அமைத்திடு. (உம்: கடலூர் ரசாயன ஆலைகள், சிவகாசி – தீக்காயம், தருமபுரி – தலசீமியா, சிக்கல் செல் அனீமியா போன்றவை).
 14. அனைத்து அத்தியாவசிய மருந்துகளும் மருந்து கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் கொண்டுவரவேண்டும். மருத்துவர்கள் மருந்துகளின் பெயர்களை பொதுபெயரில் மட்டுமே பரிந்துரையில் குறிப்பிடுவதை உறுதி செய்யவேண்டும்.
 15. நலவாழ்வு சேவைகளில் மக்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை உறுதிசெய்ய கூடிய அதிகாரபூர்வமான வழிமுறைகளை அமுல்படுத்துக. கிராம நலவாழ்வு குழுக்கள், ஆஷா போன்ற திட்டங்களை முழுமையாக, வெளிப்படையாக நடைமுறைபடுத்தி, மருத்துவமனைகளை மக்கள் கண்காணிப்பதை உறுதிசெய். கிராம நலவாழ்வு குழுக்கள் (VHWSNC), பயனாளிகள் நலச்சங்கங்கள் (PWS) திறம்பட செயல்படவும், அவற்றிற்கு வழங்கப்படும் நிதியை வெளிப்படையாக நிர்வகிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ அமைப்புகளின் அனைத்து மட்டங்களிலும் மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் மேலாண்மையை உறுதிசெய்.
 16. வருடாவருடம் அதிகரித்துகொண்டுவரும் கொசுவினால் பரவும் நோய்களை தடுக்கும் விதத்தில் மாவட்ட அளவில் சிறப்பு அலுவலரை பணியமர்த்தி மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து கொசு கட்டுபாடு மேற்கொள்ளவேண்டும்.
 17. இந்திய மருத்துவ முறைக்கு (AYUSH) போதுமான தனி கவனமும், நிதியும் அளித்து வலுப்படுத்தி அனைத்து மட்டங்களிலும் மக்களுக்கு சேவை அளிக்க வேண்டும்.
 18. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுவரும் சேவைகள் தரமானதாக இல்லை என்று பல்வேறு தரப்பினரும் கூறிவரும் நிலையில் அதற்கான கூடுதல் நிதி ஒதுக்கி முழுமையான மக்கள் பங்கேற்புடன் அம்மையங்களை செயல்படுத்தவேண்டும்.
 19. இரண்டாம் கட்ட சிகிச்சை பெறும் எச்.ஐ.வி (HIV) நோயாளிகளுக்கு போதுமான மருந்து உட்பட முழுமையான வசதிகளை உறுதிப்படுத்தவேண்டும்.
 20. மனநல மருத்துவதுக்கு தேவையான வளங்களை அதிகரித்து, ஒருங்கிணைந்த மனநல மருத்துவ திட்டதின் வாயிலாக அனைத்து தரப்பு மக்களுக்கும் மனநல சேவை கிடைப்பதை உறுதிப்படுத்தவேண்டும்.
 21. தொழிலாளர் ஈட்டுறுதி (ESI) மருத்துவ திட்டத்தின் கீழ் அனைத்து முறைசார தொழிலாளரும் பயன்பெற வழிவகை செய்யவேண்டும்.
 22. அரசு மருத்துவ துறையில் அனைத்து மட்டங்களிலும் நிலவும் இலஞ்சத்தை அறவே ஒழித்திட நடவடிக்கை எடு.
 23. மது இல்லா தமிழகத்தை உருவாக்கவேண்டும். புகையிலை சார்ந்த அனைத்து போதைபொருட்கள், மதுபானங்களை முற்றிலுமாக தடைசெய்ய வேண்டும். மதுவினால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய, உயரிய சிகிச்சை அளிக்கவேண்டும். மறுவாழ்வு சிகிச்சை மையங்களை அதிகப்படுத்த வேண்டும்.
பதிவிறக்க:
MNI Election Manifesto2019

தமிழ்நாடு மக்கள் நலவாழ்வு சபை III

இந்தியாவில் அனைவருக்கும் ஆரோக்கியம்’ இயக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு மக்காள் நலவாழ்வு சபை III, செப்டம்பர் 15, 2018 அன்று ஈரோடில் உள்ள சீமாவில் ஏற்பாடு செய்யப்பட்டது.

அன்றைய நிகழ்ச்சித் திரு த.சுரேஷ், உறுப்பினர்-மக்கள் நலவாழ்வு இயக்கம் மற்றும் சோச்சாரா அவரின் அன்பான வரவேற்பு உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து பங்கேற்பாளர்களிடமிருந்து ஒரு சில பிரதிநிதிகள் சமூக நலவாழ்வு விளக்குகளை ஏற்றி வைத்தனர்.

தீப்ஸ்-இன் இயக்குனர் திரு.சங்கர் அன்றைய நிகழ்ச்சிக்கு அடிநாதமாக தொடக்க உரையை வழங்கினார். பின்னர்,  ‘தோஷி தமிழ்நாடு’ பற்றி பேசினார்.

‘ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம்’ என்ற தலைப்பில் ‘தமிழ்நாடு மக்கள் மனநல அமைப்பு’ நிறுவனர் திரு கே.சண்முக வேலாயுதம் பேசினார்.

ரூசக் (RUWSEC) இன் இயக்குனர் திரு. பாலசுப்பிரமணியம், ‘பெண்களின் பாலியல் இனப்பெருக்க ஆரோக்கியம்’ என்ற தலைப்பில் விரிவாகப் பேசினார்.

திரு, அமீர்கான் மாநில, தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் நடைபெற்ற ‘தேசிய மக்கள் நலவாழ்வு சபை’ – தேசிய சுகாதார சபையின் வரலாறு மற்றும் பங்கேற்பை வழங்கினார்.சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் 2018 செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் ‘அனைவருக்கும் ஆரோக்கியம்’ குறித்த 3 வது தேசிய மக்கள் நலவாழ்வு சபை மாநாடு குறித்து பேசினார். அடுத்து தேசிய மாநாட்டில் முன்வைக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திரு கமலா கண்ணன், உறுப்பினர் – தொனி அமைப்பு, நன்றியை முன்மொழிந்தார். நிகழ்ச்சியை ஒழுங்காக ஏற்பாடு செய்த குழுவுக்கு அவர் நன்றி தெரிவித்தார். பங்கேற்பாளர்கள் அனைவரையும் அவர்களின் வருகைக்காகவும், உற்சாகமாக பங்கேற்றதற்காகவும் அவர் பாராட்டினார் மற்றும் நன்றி தெரிவித்தார்.

குழு-புகைப்பட அமர்வுக்குப் பிறகு, பங்கேற்பாளர்கள் அனைவரும் தேனீருடன் தங்களை புதுப்பித்தபின் கலைந்து சென்றனர்.

தமிழ்நாடு மக்கள் நலவாழ்வு சபை III_அறிக்கை

TNHA3_Final Report