மக்கள் நலவாழ்வு இயக்க பணிகள் – MNI

மருத்துவ வசதிகள் வானளாவிய வளர்ச்சியை அடைந்துள்ள நிலையிலும் எளிதாக தடுக்கப்படக்கூடிய நோய்களால் இலட்சக்கணக்கான குழந்தைகள், தாய்மார்கள் இறப்பது மட்டும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஏழ்மை பெருகுவதும், ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துக்கொண்டே வருவதும், பொது சுகாதார அமைப்புகள் வலுவிழந்து வருவதுமே இந்த இறப்புகளுக்கு காரணமாக இருக்க முடியும்.

இச்சூழலிலேயே மக்கள் நலவாழ்வு இயக்கமானது தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு முயற்சிகளையும், போராட்டங்களையும் முன்னிறுத்தி நடத்தி வருகிறது. அவற்றில் முக்கியமான சில:

கடந்த ஆண்டுகளில்:

 1. 2000-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பொதுச் சுகாதார அமைப்புகள் மீதான அய்வு;
 2. முதல் மாநில மக்கள் நலவாழ்வு சபை சென்னையிலும், தேசிய நலவாழ்வு சபை கொல்கத்தாவிலும் நடத்தியது;
 3. தேசிய நலவாழ்வு கொள்கை 2000த்தின் மீது விரிவான அறிக்கை;
 4. 2004ஆம் ஆண்டு மனித உரிமை ஆணையத்துடன் இணைந்து பொதுச் சுகாதார அமைப்புகளில் கடுமையாக பாதிக்கப்பட்ட நபர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பொது விசாரணை நடத்தியது;
 5. 8 மாநிலங்களில் மக்கள் நலவாழ்வு கண்காணிப்பு குழுக்களை உருவாக்கி பொதுச் சுகாதார அமைப்புகளை தொடர்ச்சியாக கண்காணிப்பது;
 6. 2006ஆம் ஆண்டு பெண்களும் ஆரோக்கியமும் குறித்து சர்வதேச மாநாடு நடத்தியது;
 7. 2007ஆம் ஆண்டு இரண்டாவது மாநில மக்கள் நலவாழ்வு சபை சென்னையிலும், தேசிய நலவாழ்வு சபை போபால் நகரிலும் நடத்தியது;
 8. தேசிய ஊரக நலவாழ்வு இயக்கம் குறித்த ஆய்வறிக்கை சமர்பித்தது;
 9. 2007ஆம் ஆண்டு முதல் மக்கள் கண்காணிப்பு மற்றும் திட்டமிடலுக்காக குழுக்களை அமைப்பதில் பங்கு வகிப்பது; தமிழகத்தில் இத்திட்டத்திற்கு பல முன்மாதிரிகளை வடிவமைத்து அளித்தது. இத்திட்டம் “நலவாழ்விற்கான மக்கள் செயல்பாடு” என்கிற பெயரில் செயல்பட்டு வருகிறது.
 10. 2008ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தடுப்பூசி சேவைகள் கிராமத்திலிருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து பிரச்சாரம், ஆய்வு நடத்தியது;
 11. 2008ஆம் ஆண்டு மூன்று பொதுத்துறை நோய்த்தடுப்பு மருந்து நிறுவனங்கள் மூடப்பட்டதற்கு எதிராக பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து பலமுறை போராட்டம் நடத்தியது ஆகியன குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும்.
 12. 2013 காப்பீடு திட்டம், மருத்துவமனை சார் பிரசவம் மற்றும் தடுபூசி திட்டம் ஆகிய 3ஐக்கான பிரச்சாரத்தை நடத்தியது.
 13. 2015ஆம் ஆண்டு மனித உரிமை ஆணையத்துடன் மீண்டும் இணைந்து தனியார்/பொதுச் சுகாதார அமைப்புகளில் கடுமையாக பாதிக்கப்பட்ட நபர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பொது விசாரணையை மும்பையில் நடத்தியது;
 14. 2017 முதல் அரசு நலவாழ்வு சேவைகளை தனியார் மயமாக்கலுக்கும், கட்டற்ற வணிகமயமாக்கலுக்கும் எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்துவருகிறது.
 15. 2017 மருத்துவ நிறுவனங்கள் முறைபடுத்துதல் சட்டம் – இயற்றவும், அதன் 2018 முதல் செயலாக்கத்தை கண்காணிக்கவும் செய்கிறது.
 16. 2018ல் 3வது தமிழக நலவாழ்வு சபையை ஈரோடு மாவட்டத்தில் நடத்தியது. தொடர்ந்து ராய்பூரில் தேசிய நலவாழ்வு சபையிலும், சவாரில் 4வது மக்கள் நலவாழ்வு சபையிலும் பங்காற்றியது.

 

மேற்சொன்ன நடவடிக்கைகளைத் தவிர்த்து குறிப்பாக தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த ஆங்கன்வாடி மையம், பொது விநியோகத்திட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்தது போன்றவை குறிப்பிட தகுந்த முயற்சிகளாகும்.

நலவாழ்வை மக்கள் கையில் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மக்கள் நலவாழ்வு இயக்க உறுப்பினர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தேசிய ஊரக நலவாழ்வு இயக்கத்தின் மூலம் மக்களால் அமைக்கப்படும் குழு நலவாழ்வு சேவைகளை கண்காணித்து நலவாழ்வு திட்டங்களை தீட்டுவதற்கு அடித்தளமிடும் முயற்சியில் மக்கள் நலவாழ்வு இயக்க உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக நிகழாண்டு நிகழ்வுகள்

 1. 2017 மருத்துவ நிறுவனங்கள் முறைபடுத்துதல் சட்டம் –  செயலாக்கத்தை கண்காணித்தல்.
 2. 2019 நலவாழ்வு பயனாளிகள் (நோயாளிகள்) உரிமைக்கான பரப்புரை மற்றும் கள ஆய்வை மேற்கொள்வது.

ஒருங்கிணைப்போம்!

அனைவருக்கும் நலவாழ்வை நிலைநாட்டுவோம்!!

 

 

Scroll to Top