அறிமுகம்
இரண்டாயிரமாவது ஆண்டிற்குள் அனைவருக்கும் நலவாழ்வை உத்திரவாதப்படுத்துவோம் என்ற உலக நாடுகளின் கூற்று பொய்த்துப்போனது. நலவாழ்வை மேம்படுத்துவதற்கான எந்தவிதமான முயற்சிகளையும் அரசாங்கங்கள் மேற்கொள்ள தயாராக இல்லாத அன்றைய சூழலில் குடிமைச் சமூகத்தைச் சார்ந்த சுமார் 1800 பேர் பங்களாதேஷ் நாட்டில் உள்ள சவார் என்னுமிடத்தில் 2000ஆம் ஆண்டு ஒன்றுகூடி முதல் மக்கள் நலவாழ்வு சபையை நடத்தினர். பல ஆண்டுகளாக மக்களின் நலவாழ்வில் அக்கறை கொண்ட, மக்களின் நலவாழ்வு உரிமையை நிலைநாட்டுவதற்கு பாடுபட்டுக்கொண்டிருக்கிற பல்வேறு அமைப்புகளின் முன்முயற்சியால் இச்சபையானது கூட்டப்பட்டது.
இச்சபை கூடுவதற்கு முன்னால் பல்வேறு நாடுகளில் அந்தந்த நாட்டிற்கான தேசிய நலவாழ்வு சபைகள் நடத்தப்பட்டன. இந்தியாவில் தேசிய நலவாழ்வு சபையானது 2000ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் கூட்டப்பட்டது.
இச்சபைக்கான முன் தயாரிப்புகள் சுமார் இரண்டு வருடங்கள் நடைபெற்றது. இந்த முன் தயாரிப்புகள் மக்களை ஒன்று திரட்டுவதில் தொடங்கி மக்களின் நலவாழ்வு உரிமைகள், சுகாதார நிலைமைகள், சுகாதார அமைப்புகளின் நிலைகள் குறித்து மக்கள் மன்றத்தில் விவாதித்து மக்களின் தேவைகள் மக்கள் சாசனங்களாக வெளியிடப்படும் வரை தொடர்ந்தன.
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இச்சபையில் பல்வேறு மக்கள் நலவாழ்வு பிரச்சனைகளை விவாதித்ததின் அடிப்படையில் அனைவருக்கும் நலவாழ்வு என்பதை அடைவதற்கு உலக மக்கள் ஒன்றுகூடி தங்கள் தேவையையும் விருப்பத்தையும் வலியுறுத்துவது மிக அவசியம் என்பது உணரப்பட்டது.
சவாரில் கூடிய இச்சபையின் முடிவில் ‘பீப்பிள்ஸ் ஹெல்த் மூவ்மெண்ட்’ (Peoples Health Movement – PHM) எனும் உலகளாவிலான மாபெரும் இயக்கம் உருவாக்கப்பட்டது. அதன் இந்திய அமைப்பு இந்தி மொழியில் ‘ஜன சுவஸ்திய அபியான்’ (Jana Swasthiya Abiyan – JSA) எனவும், தமிழக அமைப்பு, ‘மக்கள் நலவாழ்வு இயக்கம்’ (MNI) எனவும் அழைக்கப்படுகிறது. 22 தேசிய கூட்டமைப்புகளை தற்பொழுது உறுப்பினர்களாக கொண்டுள்ள இவ்வியக்கம் மக்கள் நலவாழ்வு மற்றும் சமச்சீரான வளர்ச்சியை நிலை நாட்டுவதிலும், நலவாழ்வை தீர்மானிக்கக்கூடிய காரணிகளை மேம்படுத்துவதையும் முதன்மை குறிக்கோள்களாக செயல்பட்டு வருகிறது.
‘அனைவருக்கும் நலவாழ்வு – இப்பொழுதே!’ எனும் முழக்கத்தில் நம்பிக்கையுள்ள, அதற்காக பாடுபடுகிற தனிநபர்கள், மக்கள் அமைப்புகள், மக்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இதன் உறுப்பினர்களாவர்.
செயலகம்:
எண் 18/7, ரத்தினபுரி, கோயம்பேடு, சென்னை – 600107, தமிழ்நாடு
தொலைபேசி: 044 – 2479 6638 மின்னஞ்சல்: mnisecretariate@gmail.com
தொடர்பு: அமீர்கான் 9443282718/9123563070, சுரேஷ் – 9840511638/7010585458
மேலும் வாசிக்க:
- People’s health movement
- ஜன சுவாஸ்திய அபியான்